கூட்டுறவுத்துறை அங்காடிகளில் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படும் சன்னரக அரிசிக்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதால், முதற்கட்டமாக விற்பனைக்கு வழங்கப்பட்ட 25 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியும் விற்றுத் தீர்ந்ததைத் தொடர்ந்து, 2-வது முறையாக மேலும் 25 ஆயிரம் டன் அரிசி விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளது என்று உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கூட்டுறவுத்துறை அங்காடிகளில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதற்கட்டமாக வழங்கப்பட்ட 25 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியும் முழுமையாக விற்பனையாகியுள்ளது.
இதையடுத்து, 2-வது முறையாக மேலும் 25 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு விரைவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.